கழிமுள்ளி நெஞ்சுக்காரி-5
கழிமுள்ளி-5
கீதாஞ்சலியும் ரமேஷூம் அடுத்தநாள் காலையில் அவங்க அவங்க வேலைக்கென்று கிளம்பிக்கொண்டிருந்தனர்.
நதியாவுக்கு காலேஜ் போகவேண்டியதில்லை என்பதால் அமைதியாக டைனிங் டேபிளில் உட்கார்ந்து டீ குடித்துக்கொண்டிருந்தாள்.
அவள் பக்கத்தில் வந்த கீதாஞ்சலி அவளது சிவந்துப்போய் இருந்த கன்னத்தைத் தடவிக்கொடுத்தாள்.
அவளுக்கு அது வலியெடுக்கவும் ஷ்ஷ்ஷ்ஆஆ என்று தன்னையும் அறியாமல் கத்திவிட்டாள்.
அதில் ரமேஷுமே திரும்பிப் பார்த்தவர் நதியாவின் கண்கள் கலங்கியிருப்பதைப் பார்த்ததும் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.
“ஏன் நதிம்மாஇப்படியெல்லாம் சேட்டை பண்ணிட்டு இருக்க. உன்னால நேத்து ஒரு பாவப்பட்ட பையனுக்கு மூணு தையல் நெத்தியில போட்டிருக்கு. கொஞ்சம் நிதானமா யோசிச்சு நடந்திருக்கலாம்ல. இப்போ பாரு உன்னை மூணு நாள் சஸ்பெண்ட் பண்ணி வைச்சிருக்காங்க. ஆம்பளை பசங்களைத்தான் அடிதடி பண்றானுங்கன்னு என் காலேஜ் வரலாற்றுல பார்த்திருக்கேன். நேத்துதான் ஒரு பெண்பிள்ளையை அடிதடி கலாட்டான்னு சஸ்பெண்ட் பண்ணிருக்கேன். எனக்கே வெளியே சொல்ல ஒரு மாதிரியா இருக்கு. என்ன நதும்மா இதெல்லாம்”
“அதுதான் வரலாற்றுலயே முதன்முறைன்னு சொல்லிட்டீங்களே மிஸ்டர் ரமேஷ்குமார். அந்த பேரு எனக்கு இருந்துட்டுப்போகட்டும். நான்தான் முதல் பெண் ரவுடியா உங்க காலேஜ்ல பார்ம் ஆகிக்கிறேன் போதுமா. சும்மா சும்மா நேத்துல இருந்து லெக்ட்சர் எடுத்துட்டே இருக்கீங்க. உங்க லவ்வர் என்னடான்னா என்னை நாடுகடத்துறதுலயே குறியா இருக்காங்க எப்படி எங்க இரண்டுபேரையும் வெளிய அனுப்பிட்டு நீங்க இரண்டுபேரும் லவ்ஸ் பண்றதுக்கா. அதெல்லாம் நாங்க விடமாட்டோம் க்கும்”என்றவள் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
அதைப்பார்த்த கீதாஞ்சலிதான் “பார்த்தீங்களா இவா எப்படி பேசுறான்னு. இவளோட சேர்க்கை சரியில்லை. இவளோட பிரண்ட்ஸ் கொடுக்கிற தைரியத்துலதான் இவா இப்படி பேசுறா. இவங்களோட வாழ்க்கைக்காகத்தானே நம்ம இவ்வளவு உழைக்கிறோம். இன்னும் புரிஞ்சிக்காமல் பேசுறதைப்பாருங்க. இவளை நான் சொன்ன மாதிரி ஹாஸ்டல்ல சேர்க்கிற வழியைப் பாருங்க”
“சரிம்மா” என்று ரமேஷ்குமார் தலையாட்டி வைத்தார்
“என்னது சரிம்மாவா?அவங்க என்னை மொத்தமா பிரிஞ்சிருக்க முடிவு பண்ணி பேசிட்டிருக்காங்க. உங்களால என்னை பிரிஞ்சிருக்க முடியுமா?”
“உன்னோட நல்லதுக்குத்தானே. அதனால் நாங்க பல்லைக்கடிச்சிட்டு இருந்துக்கிறோம் அதைப் பத்தி நீ கவலைப்படாத. இதுவரைக்கும் பாஸ்போர்ட் எடுக்கணும்னு நாங்க யோசிச்சதேயில்லை. இன்னைக்கு உனக்கும் நர்மதாவுக்கும் சேர்த்து அப்ளை பண்ணிட்டோம். நீ மூணு நாள் சஸ்பெண்டாகி வீட்டுலதானே இருக்க. நீயும் நர்மதாவும் நாளைக்கு அம்மாக்கூட பாஸ்போர்ட் ஆபிஸ்வரைக்கும் போயிட்டு வந்திடுங்க”என்றவர் வேறெதுவும் பேசாது,பாதி சாப்பாட்டுலயே எழுந்துப்போய்விட்டார்.
அவர் பாதி சாப்பாட்டுல போனதும் கீதாஞ்சலி சாப்பிடாமலயே போய்விட்டார்.
நதியா அமைதியாக உட்கார்ந்திருக்க அவளை முறைத்துப் பார்த்தவாறே நர்மதா சாப்பிட்டு முடித்துவிட்டு காலேஜ் கிளம்பினாள்.
நதியா அவளையே பார்த்துக்கொண்டிருக்கவும் திரும்பி வந்து “நீ எதுக்குமா இப்படி பாவமா பார்த்திட்டிருக்க. உனக்குப்பிடிச்ச இடியாப்பமும் பாயாவும்தான் அம்மா செய்து வைச்சிருக்காங்க. மூத்த மக வீட்டுல இருப்பாளே ஆசையா சாப்பிடுவாளேன்னு பார்த்து பார்த்து செய்துவைச்சிருக்காங்க. உனக்குத்தான் அதெல்லாம் தெரியாதே. நேத்துலயிருந்து அம்மா உன்னை நினைச்சு அழுதுகிட்டேயிருக்காங்க. நீ நல்ல கொட்டிக்கோ. அப்பாவுக்கும் நல்லபேரை அவரு காலேஜ்லயே வாங்கிக்கொடுத்திருக்கல்ல எவ்வளவு பெரிய பெருமை அவருக்கு, க்கும்”என்று உதட்டை சுழித்துவிட்டுப் போய்விட்டாள்.
“ஏதோ நான் இடியாப்பமும் பாயாவும் வேணும்னு கேட்டமாதிரியே இவாபேசிட்டுப்போறா. காலேஜ் வாழ்க்கையில இவங்க லவ் பண்ணலாமாம். நான் மட்டும் சண்டைப்போடக்கூடாதாமா?என்னங்கடா நியாயம் இது? உங்களுக்கு பசிக்கலைன்னா சாப்பிடாம போங்க. அதுக்கு நான் என்ன பண்ணமுடியும்? நான் சாப்பிடப்போறேன்” என்று எல்லாத்தையும் எடுத்து வைச்சு சாப்பிட்டவளுக்கு ஏனோ மனசு வலிக்கத்தான் செய்தது. இத்தனை நாள் ஏதோ காலேஜ் பனிஷ்மெண்ட் வாங்கினாலும் அப்பா பார்த்துப்பாங்கன்னு இருந்துட்டா. இப்பவும் அப்பா பார்த்துப்பாங்கதான். ஆனால் இந்த பாரீன் படிப்பு, பாஸ்போர்ட்டுன்னு யோசிக்கும்போது நெஞ்சுக்குள்ள கொஞ்சம் கெதக்குன்னு இருந்தது.
நதியா சாப்பிட்டு முடித்து தினேஷூக்குப் போன் பண்ணினாள்.
“அவன் போனை எடுத்ததும் என்ன நதி விஜய்கூட சண்டையா?காலையிலயே எனக்குப் போன் பண்ணிருக்க?”என்று அவன் அவளிருக்க பிரச்சனை தெரியாமல் கேட்டுவைத்தான்.
“ஏன்டா பட்டரு உன்கிட்ட பேசணும்னா உனக்குத்தானடா போன் பண்ணனும். அதுக்கும் விஜயிக்கா போன் பண்ணி பேசமுடியும் டேஷு. என்னைப் பத்தி என்னடா நினைச்சிட்டிருக்க டேஷ் டேஷ்”என்று காலையிலயே நல்ல நல்ல வார்த்தைகளால் அவனை அர்ச்சித்துக்கொண்டிருந்தாள்.
“ஆத்தா மகாமாயி மலையிறங்கு தெரியாம கேட்டுட்டேன். நானும் உன் பிரண்டுங்கிறத மறந்துடாத. நான் பாவம். நேத்து வீட்டுல வாங்குன பஜனையே போதும். நீ வேற காலையிலயே தனியா எனக்கு பூஜை பண்ணாத.நான் தாங்கமாட்டேன் ஆத்தா”என்று பாவமாப் பேசினான்.
இப்போது கொஞ்சம் சமாதானமாகியவள் “இங்கப்பாரு நீ பாஸ்போர்ட்லாம் அப்ளை பண்ணி வாங்கினல்ல. அதுல ஏதாவது கோல்மால் பண்ணி பாஸ்போர்ட் எடுக்கமுடியாம பண்ணமுடியுமா?”என்று கேட்டுவைத்தாள்.
“என்னது பாஸ்போர்ட் எடுக்கிறதுல பிரச்சனை பண்ணமுடியாமான்னு கேட்கிற. அவன் அவன் பாஸ்போர்ட் சரியா வந்திடணும்னு ஆயிரத்தெட்டு சாமியை வேண்டிக்கிட்டு இருக்கான். நீ என்ன இப்படி கேட்கிற. என்ன பிரச்சனை நதி”
“பாஸ்போர்ட் எடுத்தா அடுத்த ஒரு வருஷம்தான் நன் நம்ம பிரண்ட்ஸ்கூட இருக்கமுடியும். அப்புறம் எங்கேயாவது வெளிநாட்டுல பீ.ஜி படிக்க அனுப்பிடுவாங்க. உங்களையெல்லாம் விட்டுட்டு நான் மட்டும் படிக்கப்போயிடுவேன். அப்புறம் நம்ம பிரண்ட்சிப் அவ்வளவுதான். உனக்கு எப்படி நம்ம பிரிஞ்சுபோறது சந்தோசமா?”
“என்ன சொல்லுற நதி. இது என்ன புதுப்பிரச்சனை”
“அதுதான்டா இப்போ பெரிய பிரச்சனை”
“பாஸ்போர்ட் ஆபிஸ்ல எதுவும் பண்ணமுடியாது நதி. வேணும்னா பாஸ்போர்ட் வந்ததும் கிழிச்சுப்போட்டிரு.அது பெஸ்ட் ஆப்ஷன் உனக்கு”
“நல்ல ஐடியா?இதுக்குத்தான் நேத்து விஜய்க்கு போன் பண்ணேன். கண்டதையும் உளறாதன்னு தூங்கிட்டான். நான் அவன்கூட சண்டை”
“சண்டையா?”என்று அதிர்ந்தவன் மனசுக்குள்ளாகவே ‘இதைத்தான்டி நான் முதல்லயே கேட்டேன். அதுக்கு என்னை எவ்வளவு கழுவி ஊத்தின என்று நினைத்தவன் வெளியே சொல்லவில்லை. வெளியே சொன்னாதான் முதல்ல அவன் மண்டையை உடைச்சிடுவாளே!வாயைத் திறந்திடாத தினேஷு என்று அமைதியாகிவிட்டான்.
“என்னடா ஒன்னும் சொல்லாம அமைதியாகிட்ட?”என்று நதியா கத்தினதும் உணர்வுக்கு வந்தான்.
“அதில்ல இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வுன்னு யோசிக்கிறேன்”
“நான் தீர்வெல்லாம் யோசிச்சிட்டேன். அதுக்கு உங்க நாலுபேரோட உதவிதான் தேவை”
“பார்றா நீயே தீர்வை யோசிச்சிட்டியா சூப்பர். அப்போ அதை நடத்திடவேண்டியுததானே”
“அதுக்கு நான் லவ் பண்ணனும்ல.அப்போதானே கல்யாணம் பண்ணிக்க முடியும்”
“என்னது லவ்வா?ஏதே கல்யாணமா!”என்று அதிர்ந்து கேட்டவனுக்கு இருமல் அழைக்காமலே வந்து தொலைத்தது.
லொக்கு லொக்குன்னு இருமினவன் தண்ணியை குடிச்சு தன்னை சமன்படுத்திக்கொண்டு நிதானமாக அவளிடம் கேட்டான்.
“நீ எதுக்கு லவ் பண்ணனும்?நாங்க எதுக்கு அதுக்கு சப்போர்ட் பண்ணனும்?என்ன ப்ளான் வைச்சிருக்க.முதல்ல நீ என்ன மைண்ட்செட்டுல இருக்கன்னு சொல்லு நதி. எங்களை பைத்தியம் பிடிக்க வைக்காத?”
“டேய் நான் பாரீன் போகாம இருக்கணும்னா இங்கயே ஒருத்தனை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டு குழந்தை குட்டின்னு செட்டிலாகிட்டா அனுப்ப மாட்டாங்கள்ல அதுக்குத்தான்”
“உன் அறிவுல ஆணி அடிக்க. இதென்ன ப்ளான்னு இப்படி யோசிச்சு வைச்சிருக்க நதி”என்று கோபப்பட்டான்.
அதைக்கேட்டதும் நதியாவுக்கு எரிச்சல்தான் வந்தது.
“டேய் பட்டரு. உனக்கு ஹெல்ப் பண்ணமுடிஞ்சா ஹெல்ப் பண்ணு. விஜய் பேசுன மாதிரியே நீயும் பேசாத. அவன்கூட இதுக்குத்தான் சண்டைப்போட்டேன்”
“அதுசரி அவனே ஹெல்ப் பண்ணலைன்னா நான் எப்படி ஹெல்ப் பண்ணுவேன்னு யோசிச்ச?”
“அப்போ நீயும் ஹெல்ப் பண்ணமாட்ட?”
“ஆமா?”
“சரி” என்றவள் போனை வைத்துவிட்டாள்.
அடுத்து இவா அவனுங்களுக்குத்தான் போன் பண்ணுவா. அதுக்குள்ள நம்ம முந்திப்போம் என்று அவங்க இரண்டுபேருக்கும் போன் பண்ணி விசயத்தை சொல்லி அலர்ட் பண்ணிட்டான்.
நதியா உடனே வஸந்துக்கும் முகேஷுக்கும் போன் பண்ணினாள். இரண்டு நம்பரும் நாட் ரீச்சபிள்னு வந்துச்சு.
அதுக்குள்ள எங்கப்போய் தொலைஞ்சிட்டானுங்க இவனுங்க. எப்படியும் என்கிட்டத்தானே மாட்டியாகணும்.இருங்கடா காலேஜிக்கு வந்து உங்களை வைச்சிக்கிறேன் என்று திட்டியவளுக்கு அழுகை அழுகையாக வந்தது.
அவளது ஸ்கூல் டேய்ஸ்ல இருந்தே இவங்க நாலுபேரும்தான் பிரண்ட்ஸ். நதியாவுடைய குணத்துக்கு யாருக்கிட்டயுமே ஒத்துப்போகாது.
ஆனால் தன்னையே தொலைத்தவனாக வந்த விஜயிடம் அவள் ஒட்டிக்கொண்டாள். அவனை இந்த உலகிற்கு வாழ மீண்டும் மீட்டுக்கொண்டு வந்ததே இந்த தேவதைப்பெண்தான்.
அதனால் விஜய் தோழனான். அதன்பின் விஜயின் மூலமாக மீதி மூன்றுபேரும் நண்பர்களானார்கள்.
இவங்க ஐந்துபேரும்தான் அப்போதிலிருந்து இப்போவரைக்கும் ஸ்கூல்லயும் சரி காலேஜ்லயும் சரி ரவுடிசக் கும்பல்னு பேரு வாங்கிட்டிருக்காங்க. அதுக்காக படிப்புல சோடைபோகவில்லை. அவங்க படிப்பிலும் சொல்லிவைச்சு அடிக்கும் கில்லீஸ்தான்.
இப்போ காலேஜ்ல வந்துதான் அரியர்ஸ்ஸோட ரவுடிசம் பண்ணிட்டிருக்காங்க. அதையும் நினைச்சா இவங்க ஐஞ்சுபேரும் ஒரே செமஸ்டர்ல படிச்சு பாஸாகும் ஜெகதலபிராஜபதிகள்தான்.
நதியா அதுக்காகத்தான் தன்னுடையை நண்பர்களையும் சரி தன்னுடைய பெற்றவங்களையும் சரி விட்டுட்டு படிப்புக்காக அங்கபோகணும் இங்க போகணும்னு நினைக்காமல் இங்கயே அவங்ககூடவே இருக்கணும்னு ஆசைப்படுகிறாள்.
அதுக்காக என்னென்ன செய்யணுமோ எல்லாத்தையும் செய்வாள். அதுல ஒரு ஐடியாதான் இந்த லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிறது.
ஒரு இரண்டுநாள் இப்படியே புலம்புவா அப்புறம் நார்மல் மோடுக்கு வந்திடுவா என்று நினைத்தார்கள்.
ஆனால் எல்லா விசயத்தை அப்போ அப்போ மறந்து புது விசயத்துக்கு போறவ, இந்த லவ் பண்ற ப்ளானை மட்டும் மறக்கவேயில்லை.
ஏற்கனவே மூணு நாள் காலேஜ்லயிருந்து சஸ்பெண்ட் பண்ணிருக்காங்க என்றதும் யாரையும் வீட்டைவிட்டு வெளியவிடவில்லை.
அவங்க ஐஞ்சு பேரும் சந்திக்கவே முடியவில்லை.அடுத்த இரண்டு நாளும் நதியாவுக்கும் நர்மதாவுக்கும் பாஸ்போர்ட் ஆபிஸுக்கு போறதுக்கும் அது சம்பந்தபட்ட டாக்குமெண்ட்ஸ் ரெடி பண்றதுக்குமே நேரம் சரியாக இருந்தது.
அவங்ககூடவே கீதாஞ்சலியும் போனதால், அவளுக்கு நர்மதாவிடம்கூட எல்லாத்தையும் பேசமுடியவில்லை.
கீதாஞ்சலியும் நதியாவும் சண்டைக்காரங்க போலவே இரண்டு நாளும் பேசாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டிருந்தனர்.
பிரண்ட்ஸ் வேற போன்லகூட பேசலைன்னதும் ரொம்ப மனசளவில் ஒருமாதிரி தனியாக உணர்ந்தாள்.
அடுத்தநாள் காலேஜிக்கு போகணும் அவளோட வண்டி வேற அங்கதான் நிப்பாட்டிட்டு வந்திருந்தாள். அதனால் ஆட்டோவுலதான் போகணும்னு யோசித்துக்கொண்டு வெளியே உட்கார்ந்திருந்தாள்.
அப்போதான் அவளது என்பீல்ட்டின் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தாள் விஜய் அவளோட வண்டியில் வீட்டுக்கு வந்தான்.
அவளோட வண்டியை பார்த்ததும் சந்தோசம் என்றால் விஜயைப் பார்த்தது அதைவிடவும் சந்தோசம். ஆனால் அதை வெளிக்காட்டிக்காது அவனை முறைத்துப்பார்த்தாள்.
கீதாஞ்சலி வண்டி சத்தம் கேட்டதும் வெளியே வந்துப்பார்த்தாள். விஜயைக் கண்டதும் அவளது முகமே மாறிவிட்டது.
ஆனாலும் மகளுக்காக எதுவும் சொல்லாது உள்ளே போய்விட்டார். அம்மாவின் முகம்மாறுதலைக் கண்டாலும் இவள் அதைக் கண்டுக்காது விஜயிடம் ஓடினாள்.
போய் அவன்கிட்ட பேசாமல் வண்டியைத் தொட்டுப்பார்த்தாள்.
எத்தனைபேர் நட்புன்னு சொல்லிட்டு மூணு நாள்கூட பேசாமல் இருக்காங்க. ஆனா நீதான் என்னைத் தேடிவந்த செல்லம் என்று வண்டிக்கு முத்தம் கொடுத்தாள்.
அதைப்பார்த்த விஜயோ வண்டியை ஒரு எத்துவிட்டான். வண்டி கீழே சரிய அதோடு சேர்த்து அவளும் விழுந்தாள்!
“யம்மாஆஆஆஆ”என்று வண்டிக்கு மேல விழுந்துக்கிடந்தவளைப் பார்த்த விஜய் “உனக்காக என் வீட்டுல இருந்து பஸ்ல போய் இறங்கி,அங்கிருந்து வண்டியை கொண்டுட்டு வந்தா வண்டியைக் கட்டிப்பிடிச்சு டயலாக் பேசுற. அதையே கட்டிப்பிடிச்சுட்டுப் படுத்துக்க போடி லூசு”என்று திட்டிவிட்டு அவளைப் பார்க்காது கோபத்தில் போய்விட்டான்.
ஐய்யோ அம்மாஆஆஆ என்று வலியோட எழுந்து நின்றவளைப் பார்த்து அம்மா தங்கச்சியென்று எல்லோரும் சிரித்துக்கொண்டிருந்தனர்.
அவ்வளவுதான் அவர்கள் மேலிருந்தக் கோபம் குறைந்து அவளும் சிரித்துவிட்டாள்.
மூணு நாளா இருந்த மனத்தாங்கல் போய் சமாதானமாகிவிட்டாள்.
ஆனாலும் அந்த லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கணும் அப்படிங்கிற எண்ணம் மட்டும் அடிமனசுல அப்படியே தங்கிவிட்டது!
ஆனாலும் நீ இவ்வளவு அறிவாளியா இருக்கக்கூடாது நதியா?