மூப்பு அடையா யட்சகா 4
Muppu4
4 மூப்பு அடையா யட்சகா!!
கண்ணாடி முன்னால் நின்று சிவப்பு நிற சேலைக்கு மடிப்பு எடுத்துக் கொண்டு இருந்தாள் தேனிசை..
"இதெல்லாம் சரியா வருமான்னு எனக்கு தெரியல இசை வெளிய தெரிஞ்சா, நம்ம மானம் போயிடும் என்று இசையின் தாய் படுக்கை மீதிருந்த பெட்டியில் அவள் ஆடைகளை மடித்து அடுக்கி வைத்துக் கொண்டிருக்க..
என்னதான் பெரிய வீட்டு சம்மந்தமாக இருந்தாலும் இப்படி கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு மாசம் அவங்க வீட்டுல தங்குறது எல்லாம் கொஞ்சம் அதிகப்படியாதான் இருக்கு" என்று தேனிசை தகப்பன் காபியை ஆத்தி கொண்டு வந்து மகள் கையில் கொடுக்க.. அதை வாங்கி தொண்டைக்கு இதமாக குடிக்க ஆரம்பித்தவள்...
"உங்க மக மேல நம்பிக்கை இருக்கு இல்ல,
"அதெல்லாம் நிறைய இருக்கு , ஆனா
"என்ன ஆனா ஆவன்னா விடுங்க.. நான் பாத்துக்குறேன், ஒரு மாசம் தானே சுத்தி இருக்கிறவங்க ஏதாவது கேட்டா வேலை விஷயமா பெங்களூர் போய் இருக்கான்னு ஏதாவது அடிச்சு விடுங்க .. "
"உன்னை அவங்க கூட யாராவது பாத்துட்டா,
"அப்பா , அவங்க வாழ்றது தங்க கோட்டைக்குள்ள இங்க இருக்கிற ஆட்கள் ஏன் அங்க போக போறாங்க ... யாரும் என்ன பாக்குறதுக்கு வாய்ப்பே இல்லை... நீங்க என்ன நினைச்சு டென்ஷன் ஆகாம உங்களை பார்த்துக்கோங்க "என்று முடிப்பதற்குள் வீட்டு வாசலில் கார் ஹாரன் சத்தம் கேட்க..
"ஜீவா வந்துட்டாரு போல இருக்கு, உள்ள கூப்பிட்டு உட்கார வச்சு காபி கொடுங்க... நான் எல்லாம் எடுத்துட்டேனான்னு இன்னொரு தடவை செக் பண்ணிட்டு வரேன்..
"ம்ம் சரிம்மா" எப்போதும் மகள் செய்தால் சரியாக இருக்கும் என்று நம்பும் பெற்றோர்கள் இப்போதும் தலையாட்டினர்.. வாசலில் காரை விட்டு இறங்கி யட்சன் நிற்க
"வணக்கம் சார் என்று இசை தாயும் தகப்பனும் அவனுக்கு வணக்கத்தை வைக்க
உள்ள வாங்க சார்....
"இல்ல இருக்கட்டும் அவ கிளம்பிட்டாளா? என்று முடிக்கும் முன் சேலை மடிப்பை நீவி விட்டுக்கொண்டு பெட்டியோடு வெளியே வந்தவள் வாசலில் டிராக் பேன்ட் டி-ஷர்டில் கேஷுவல் லுக்கில் நின்ற யட்சனை பார்த்து அப்படியே பிரேக் அடித்து அங்கேயே நின்று கொள்ள....
"இவரா ?? இந்த ஜீவாவுக்கு அறிவே இல்ல, சும்மா சும்மா இந்த ஆளைக் கொண்டு வந்து கிராஸ்ல விடுறதே வேலையா வச்சிருக்கான் , என்று பல்லை கடித்தவளை மேலும் கீழும் பார்த்தவன்
"பொண்ண ரொம்ப நல்லா வளர்த்து இருக்கீங்க என்றான் நக்கலாக...
"ஆமா சார் சின்ன வயசுல இருந்தே இசை பொறுப்பான பொண்ணு "
"ம்ம் ரொம்ப "என்றான் உதட்டை பிதுக்கி
"அப்பா அவருக்கு ஆயிரம் வேலை இருக்கும் கிளம்புவோமா சார் .... படபடத்தாள்...
"ஆயிரம் வேலையில இதுவும் ஒரு வேலைதான்ம்மா ஒன்னும் அவசரம் இல்லை பெரியவங்க பேசிட்டு இருக்கோம்ல அமைதியா இரு "என்றவனை எதுவும் செய்ய முடியாது ஆடைக்குள் நண்டு புகுந்தது போல நெளிய ... யட்சன் உள்ளே வந்து சிறிது நேரம் பேசிவிட்டு
"போலாமா?
"ம்ம் போலாம் "என்று ஓட்டமும் நடையுமாக காரை நோக்கி ஓடினாள் .... காரின் பின் இருக்கையில் ஏறி அமர்ந்தாள் ..... யட்சன் காரை ஓட்ட அவள் பின்னை தூங்குவது போல கண்ணை மூடி கொண்டாள் ...
அவள் இவனிடம் பேச தயார் இல்லை
அவன் இவளிடம் பேச விரும்பவில்லை தன் கோவத்தை வண்டி வேகத்தில் காட்டினான் வேண்டுமென ஹாரன் அடித்து கொண்டே வண்டியை ஓட்டினான் ...
"இடியட்ஸ் லோ கிளாஸ் ஆளுங்க புத்தி இப்படி தான் இருக்கும் போல, காரை ஒழுங்கா ஓட்டினாலும் வேணும்னு வந்து வண்டியை இடையில விட்டு காசு பறிக்க பார்க்கிறது ....ப்ளடி ___ச்" என்று கெட்டவார்த்தை போட்டு திட்ட இவளுக்கு கேட்கத்தான் செய்தது ...
"பணத்துக்காக எதையும் செய்ற ____ கூட்டம் ... ப்ளா ப்ளா என்று போனது போனது வீடு வரும் வரை அவன் வசைபாடல் போனது .. கண்ணை திறந்தா பாருடா என் டொமட்டோ!! என்று தேனிசை கண்ணை திறந்தாள் இல்லை ...
"ம்ம் இறங்கு.... என்றதும் பெட்டியை தூக்கி கொண்டு தேனிசை இறங்க ....
மேடம் வந்தாச்சு என்று வேலைசெய்யும் நபர்கள் ஆரத்தி தட்டோடு ஓடி வர
"வாட் இஸ் திஸ்? என்றான் புரியாது
"இல்ல ஜீவா தம்பிதான் மேடம் உள்ள வரும் முன்ன ஆரத்தி எடுக்க சொல்லிட்டு போனாங்க...
இவளுக்கு ரொம்ப அவசியம் என்று அவளுக்கு கேட்கவே முணுமுணுத்தான்...
"எடுக்கவா சார்" என்றதும் தலையாட்டி நகர போன யட்சன் போன் அதிரவும் போனை எடுத்தவன் நகராது நிற்க, அவன் அருகே தேனிசை நின்று கொண்டிருக்க ஆரத்தி சுற்றப்பட்டது ...
"வலது கால் வச்சி வாங்கம்மா" என்றதும் தேனிசை வலது கால் வைத்து உள்ளே நுழைய , அதே சமயம் ஏதேர்ச்சியாக போனை பேசி விட்டு வைத்த யட்சனும் வலது காலை அவள் காலோடு வைத்து உள்ளே நுழைந்தான்...
"இவங்க நம்ம வீட்டு கெஸ்ட் கவனமா பார்த்துக்கோங்க "தனியாக அவளை பார்வையில் ஜாடை பேசும் யட்சன் ஆட்கள் முன்னே எப்போதும் யாரோ போல மரியாதையாக நிற்பதும் ,நடப்பதும் என்று அசாத்தியமான நடிப்பை காட்டி சந்தேகம் வராது காட்டி விடுவதில் அவள் வல்லவனே!!
"என்ன வேணும்னாலும் இங்க வேலை பார்க்கிறவங்க கிட்ட கேளும்மா, செஞ்சு தருவாங்க" அவன் உத்தரவுகளை பார்த்து கொண்டு நின்ற தேனிசை நோக்கி யட்சன் திரும்பி கூற
"எம்மாடி நடிப்பு அரக்கன் தான் போல இந்த கிழவன், எப்படி நல்லவன் வேஷம் போடுறான்" என்று உள்ளுக்குள் புகைய
"சரிங்க சார் என்று அவளும் பதிலுக்கு தலையாட்ட
"நீ மட்டும் குறைஞ்ச நடிப்பாடி நடிக்கிற நடிப்பு அரக்கி , நடிக்க , ஏமாத்த கத்துக்கிட்டதே உன்கிட்ட தான் என்று யட்சன் போனில் பேசுவது போல சொல்லி கொண்டே மாடி ஏறி போக.. பெருமூச்சு விட்டவள் தனக்கு அவர்கள் காட்டிய அறைக்குள் போய் புகுந்து கொண்டாள்...
படுக்கையில் ஆடை கூட மாற்றாது யட்சன் அப்படியே விழுந்தான் ...அறை உள்ளே வந்த தேனிசையும் பெட்டியை வைத்து விட்டு அந்த வெல்வெட் படுக்கை மீது சரிந்தாள் கண்கள் நான்கும் மூடி கொண்டது
என்னே அநியாயம் இஃது
வெறுத்தவர்கள் அன்றோ கண்ணுக்குள் வந்து இதயம் உள்ளே புகுந்து காட்சியாக விரிந்தனர்...
"அதான் எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை வேண்டாம்னு சொல்லிட்டேன்ல பின்ன எதுக்கு வந்து பார்ப்பான்னு, அவர் பிஏ கிட்ட சொன்ன ... யார கேட்டுட்டு சொன்ன என்று லேடிஸ் ஹாஸ்டலில் உச்ச குரலில் கத்திக் கொண்டிருந்தாள் தேனிசை.... அவள் தோழியோ மல்லிகை பூவை மடித்து அவள் தலையில் குத்திவிட்டபடி
"பத்து நாளா ராத்திரி தூக்கம் இல்லாம பேய் மாதிரி சுத்திக்கிட்டு இருக்க, இன்னும் அஞ்சு நாள் இதே மாதிரி சுத்துனா, பேய் மாதிரி இல்ல செத்து பேயாவே மாறிடுவியோன்னு பயம் , அதான் வருவான்னு சொன்னேன் கொஞ்சம் பவுடர் போடு முகம் டல்லா இருக்கு ... என்ற தோழியை முறைத்தவள்
"இப்ப பவுடர் ஒன்னுதான் குறைச்சல்
"ஆமா , போற வேலை அப்படில்ல...
"அந்தக் கிழவனுக்கு இந்த வயசுல கண்ணு தெரியுமோ தெரியாதோ , இந்தப் பூவு பவுடர் பொட்டு இது மட்டும் தான் குறைச்சல்... இந்த வயசுல அப்படி என்னத்ததாண்டி பண்ணுவானுங்க" என்றதும் அவள் தோழி ஊமையாக சிரித்துக்கொண்டே அவள் காலடியில் உட்கார்ந்து காட்டன் சேலையில் மடிப்பை எடுத்து விட்டுக் கொண்டிருந்தவள் சிரிப்பை யோசனையாக பார்த்தவள்
"உன் சிரிப்பில ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரியே தெரியுது , எனக்கு உண்மையாவே புரியலடி , அப்படி ஐம்பது வயசுக்கு மேல என்னதான் பண்ணுவாங்க ... அதுவும் சின்ன வயசு பொண்ணுங்க கூட..
"ம்ம் பண்ண வேண்டியது பண்ணுவாங்க 20 வயசு ஆம்பளைய கூட நம்பலாம் நம்பி பக்கத்தில் உட்காரலாம் ... ஆனா, 40 வயசுக்கு மேல ஆன அங்கிள்ஸை நம்ப கூடாதுன்னு ஏன் சொல்லுவாங்கன்னு நீ போய் பாரு... அப்புறம் புரியும் .... வக்கிர எண்ணம் புடிச்ச கெழடுங்க ... சின்ன பொண்ணு கிடைச்சா விடவா செய்வானுக.... அத்தோட காசை கொடுத்து ஒன்னை வாங்கினா அது அவங்க பொருள், தன்னோட பொருளை என்ன வேணும்னாலும் செய்வாங்க... இத்தனை வருஷமா கட்டி காப்பாத்துன கௌரவம் , மரியாதை எல்லாத்தையும் விட்டுட்டு நெனச்ச மாதிரியெல்லாம் வாழ ஒருத்தி கிடைச்சா விடவா செய்வாங்க இவனுங்க ., தன்னோட இச்சை காமம் வெறி அத்தனையையும் தீர்த்திடுவாங்க,
"நீ சொல்ல சொல்ல பயமா இருக்குடி, கண்டிப்பா போயே ஆகணுமா...தேனிசை கண்ணில் பயம் கவ்வி காண்பது ...
"என்னடா இவ வலுக்கட்டாயமா இதுக்கு அனுப்பி வைக்கிறாளேன்னு தப்பா நினைக்காத இசை.. என்னால உனக்கு உதவி செய்ய முடியாதுன்னு உனக்கே நல்லா தெரியும்... உன் நிலமையும் எனக்கு நல்லா தெரியும் , இந்த நிலைமையில இதைத்தவிர உனக்கு எந்த வழியும் என்னால காட்ட தெரியல, சாரிடி நான் உனக்கு கெட்ட தோழிதான் என்ற தோழியை செல்லமாக அடித்த தேனிசை ...
"நட்புல என்னடி கெட்ட நட்பு நல்ல நட்பு நீ எப்படின்னு தெரிஞ்சு தானே உன் கூட நட்பு வச்சேன் .. சரி விடு எவ்வளோ பார்த்தவதான இதையும் பார்த்துடுவோம் கிழவன் தான சமாளிச்சிடலாம்... மீறி ஓவரா குசும்பு பண்ணினான் நாலு தட்டு பாடியா ஆகிட மாட்டான் .... ஆட்டோவுல போயிடுறேன் எதுக்கும் உனக்கு லோகேசன் சேர் பண்ணுறேன் , அங்க எதாவது அசம்பாவிதம் ஏற்படுற மாதிரி இருந்தா நாலு பேரோட வந்துடு..
ம்ம் பார்த்து போயிட்டு வா என்ற தோழிக்கு தலையசைப்பு கொடுத்து விட்டு ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள் தேனிசை...
இப்போதும் கூட மதில் மேல் பூனை போல் இரண்டு கெட்டான் மனநிலை... சரி சொல்வோமா வேண்டாம் என்போமா தேவை ஒரு பக்கம், பயம் ஒரு பக்கம் என்று அவள் பயணம் அந்த கோவில் அருகே போய் நின்றது....
கண்ணாடி முன்னே தன் வெள்ளை நிற சிகையை ஜெல் வைத்து சீவி கொண்டு நின்றான் யட்சன் ...இரவும் ஒருமுறை குளித்து டவல் கட்டிய தன் படிக்கட்டு தேகத்தை கண்ணாடியில் பெருமூச்சு விட்டு பார்த்தான் ..
போவோமா வேண்டாமா?? சிறு தயக்கம் ஒன்று எட்டி பார்க்க போன் ரிமைண்டர் மணி ஒலித்தது
மீட்டிங் வித் சுகர்பேபி அட் 9 ஓ கிளாக் என்று கேப்சனோடு ஒளிர.... பரபரப்பு ஆனது இளமைக்காரனின் உடல் ....
இது ஓகேவா இருக்குமா ரெட் , ப்ளக், க்ரே கேஷுவல் லுக்கா இல்லை பார்மல் லுக்கா ? எது போட்டா நல்லா இருக்கும் வாட்ரோப் உள்ளே தலையை விட்டு ஒவ்வொன்றாக தேடி முகத்தை சுருக்கியவன்....
"ப்ச் என்னடா இது எதுவுமே தோண மாட்டைக்குது மண்டை ப்ளாங்கா இருக்கு .. சுகர்பேபி ஒரே நாளையில ப்ளாங்கா மாத்திட்டா போல என்று மீசை நடுவே அசட்டு சிரிப்பு அழகாய் கொடுத்தவன்
"பொண்ணுங்களுக்கு ப்ளக் பிடிக்கும்னு ஜீவா சொல்வான்ல கருப்பு போடுவோமா?? கை தேடி பிடித்து கருப்பு நிற சட்டை ப்ளூ ஜீன் ஒன்றை எடுத்தது ... ஒன்றுக்கு ரெண்டு முறை தன்னை திருப்தியாக பார்த்தவன்
"சண்முகம்" மாடியில் இறங்கி வந்த முதலாளிக்கு கடவுள் கருணை காட்டி இருக்கலாம் என்று சண்முகம் பெருமூச்சு விட்டார் ...
இப்பவும் முப்பது வயசு பையன் போல மிடுக்காக இருக்கார் , பணம் வசதி அழகு, என்றும் இளமை குவிந்த சொத்துக்கள், அதை ஆள வாரிச்சுன்னு எல்லாம் கொடுத்த கடவுள் , நீண்ட நாள் வாழ துணையை கொடுக்காம அல்லாட விட்டுட்டாரே அதனால தான இப்படி அல்பசகம் தேடி மரியாதைக்குரியவன் போக வேண்டியதாகி போனது" என்று அவருக்கே வருத்தமானது...
"சார் இங்க தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் ..எந்த காரை எடுக்க ??
"எப்பவும் போற கார் வேண்டாம் சண்முகம் நான்தான்னு தெரிஞ்சுடும் ரிஜிஸ்டரேசன் முடிஞ்சு நம்பர் போடாம ஒன்னு நிக்குதே அதை எடு ...
"ஓகே சார் ... என்று சண்முகம் காரை எடுக்க போக
"சண்முகம்
"சார் என்று அவர் திரும்பி பார்க்க வீட்டை நோட்டம் விட்ட யட்சன் மகன் அறையை பார்க்க
"தம்பி ப்ரண்ட்ஸ் கூட கிளப் போயிட்டார் மார்னிங்தான் வருவார்
"ஓஓஓஓ .... சொன்னான் மறந்துட்டேன்.... அப்பறம் சண்முகம்
"என்ன சார்
"இல்லை ரொம்ப வயசு தெரியுதோ ? "என்று மீசையை கார் கண்ணாடி பார்த்து திருக்கினான்
"ராஜா போல இருக்கீங்க சார்... கண்டிப்பா உங்களை அந்த பொண்ணுக்கு பிடிக்கும் .... என்றதும் அழகாய் புன்னகை செய்தவன் வேலை , பணம் கம்பெனி என்று எதையும் நினைக்காமல் வரும் அவளிடம் எப்படி பேச எப்படி பேசி சம்மதிக்க வைக்க என்ற யோசனையில் இருந்தான் ..
மது மாது நாட்டுக்கு கேடோ இல்லையோ, வீட்டுக்கு கேடே மனம் போல மாது தேடி மாண்டோர் பட்டியலில் இவன் புதுவரவு!!