அஃது 16

Akthu16

அஃது 16

16 அஃது !!

முன் பகை காரணமாக பிள்ளைகள் கடத்தபட்டதாகவும் கடத்தல்காரன் வேறு ஒருவரை மாட்டிவிட்டுவிட்டு தப்பி ஓட்டம், தனிப்படை போட்டு தப்பி ஓடிய நபரை போலீஸ் தேடுகிறது என்று அர்ஜூன் பத்திரிக்கைக்கு பேட்டி கொடுக்க .. அவன் பேச்சில் எல்லாரும் சலசலக்க 

சார் அப்போ குற்றவாளியை கண்டுபிடிக்கலையா?  

கூடிய விரைவில் கண்டுபிடிச்சிடுவோம் இப்போதைக்கு பிள்ளைங்க ஃசேப்பா வந்துட்டாங்க என்று முடித்து விட்டு மூவரையும் நோக்கி நடந்து வந்தவன் .. 

"நீங்க மூணு பேர் பண்ணினதை மீடியா முன்னாடி சொன்னா பாதிக்க பட போறது நீங்க இல்ல.. இந்த பிள்ளைங்க அதனால பிழைச்சு போங்கன்னு விடுறேன் போங்க "என்று அர்ஜூன் போய்விட்டான்.. மூவரும் நொந்து போயினர்..  

"ரூபி எங்க போற , நில்லு ரூபி...

ரூபி தன் குழந்தையை இழுத்துக் கொண்டு நீதிமன்றத்தை விட்டு வெளியேற பார்க்க ரவி ஓடிப்போய் அவள் கையைப் பிடித்து இழுத்தான்..

ஆண்களை விட அவர்கள் மனைவிகளுக்கே சங்கடம் அதிகம் ... நம்ம புருசனா இப்படி பண்ணினான் என்று ஜீரணிக்க முடியாது நின்றனர் .. 

"சத்தியமா சொல்றேன் இப்படியெல்லாம் நடக்கும்னு நான் நினைச்சு பாக்கல ரூபி... 

"ப்ச் கைய விடுங்க... நான் கூட உங்க மேல தப்பு இருக்காதுன்னு நினைச்சேன்... ஆனா எப்படி உங்களால முடிஞ்சது . ஒரு குடும்ப நாசமாகுறதுக்கு நீங்க காரணமா 

"சொன்னா கேளுடி அன்னைக்கு இருந்த நிலைமையில

"செஞ்சது கூட தப்பு இல்லைங்க, பிழைகள் நடக்க வாய்ப்பிருக்கு... ஆனா அந்த பிழையை பணத்த வச்சு மறைக்க பார்த்திருக்கீங்க பாருங்க அதைத்தான் என்னால தாங்க முடியல.... நம்மள சுத்தி இவ்வளவு பணம் இருந்ததே, உங்க குழந்தையை கண்டு பிடிக்க முடிஞ்சதா

"ம்ஹூம் 

"இல்லல்ல நமக்கு எவ்வளவு வலிச்சது, புள்ள காணாம போனதுக்கே நம்ம எவ்வளவு பதட்டப்பட்டோம் ஆனா, அந்த மனுஷன் பொண்டாட்டி புள்ள ரெண்டு பேரோட நிலைமையும் யோசிச்சு எவ்வளவு கலங்கி போய் நிற்கிறார்னு பார்த்தீங்களா... இதுக்கு காரணம் நாம ,அய்யோ தாங்க முடியலைங்க.. 

"அதான் தப்பு பண்ணிட்டேன்னு சொல்றேன்ல ரூபி 

"சொன்னா எல்லாம் சரியாயிடுமா, வேண்டா ரவி எனக்கு உங்கள பாக்கவே எரிச்சலா இருக்கு... ப்ளீஸ் நான் எங்க வீட்டுக்கு போறேன்..

"ப்ளீஸ்டி அப்படியெல்லாம் போயிடாத , நான் செஞ்ச தப்புக்கு என்ன வேணும்னாலும் செய் .. ஆனா என்ன விட்டுப் போய் மரண தண்டனை மட்டும் எனக்கு கொடுத்திடாத... நானே கூனி குருகிப் போய் நிக்கிறேன்... நீயும் என்னை விட்டு போயிட்டேன்னா சத்தியமா செத்துப் போயிடுவேன் என்று ரவி தன் மனைவி கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்ச... மகளோ தகப்பனை புழுபோல் பார்த்தவள் 

"என் டாடி அப்படி செய்வார் , இப்படி செய்வாருன்னு எல்லார்கிட்டயும் பெருமையா சொல்லுவேன்... ஆனா நீங்களாப்பா இப்படி பண்ணினது, கருப்பன் ஆங்கிள் எவ்வளவு ஸ்வீட் தெரியுமா, அவர் பொண்ணை போல எங்களை பார்த்துக்கிட்டார்.. அவ்வளவு கஷ்டப்படுறாங்கப்பா, அந்த கஷ்டத்துக்கு எல்லாம் காரணம் நீங்களாப்பா?? என் டாடி ஹீரோன்னு நினைச்சேன்... நோ நோ மை டாடி இஸ் வில்லன் , நீங்க வில்லன் டாடி , போங்க ஐ ஹேட் யூ என்று அவன் கையை தள்ளி விட்டுவிட்டு குழந்தை ஓடிவிட்டது ...

அவமானம் தலையை நிமிர்த்த முடியவில்லை அன்று ஒரு கணம் நிதானம் இழந்து செய்த செயலில் இன்று யாரையும் தலை தூக்கி பார்க்க முடியாமல் ஆகிப்போனது .. காலில் விழாத குறையாக மனைவி பிள்ளையை கெஞ்சி கூத்தாடி அழைத்து போனான்... 

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் !! 

"என்னமோ என்ன வண்டி வண்டியா குறை சொன்னீங்க இப்போ குறையா நிக்கிறது யாரு கிருஷ்... உங்ககிட்ட நான் இப்படி ஒன்னை எதிர் பார்க்கவே இல்லை.. செஞ்சதெல்லாம் செஞ்சிட்டு கல்லூளிமங்கன் மாதிரி உங்க பாட்டுக்கு இருந்திருக்கீங்க.... நான் அப்பவே நினைச்சேன் பிரெண்டு பிரெண்டுன்னு சேர்ந்து கொட்டம் அடிக்கும் போதே ஏதோ தப்பு நடக்க போகுதுன்னு .. இதோ ஒரு குடும்பத்தையே கெடுத்துட்டு மூணு பேரும் வந்து நிக்கிறீங்க... 

நான்சி "

"நல்ல வேளை இதை யாரும் வெளியே சொல்லலை இல்ல நீங்க தலைய வெளியே காட்ட முடியாது... கேவலப்பட்டு இருப்பிங்க "என்று நான்சி கையை கட்டிக்கொண்டு நின்ற தன் கணவனை பல்லை கடித்துக் கொண்டு பார்த்தாள்

"இப்ப கூட உங்களை விட்டுட்டு போறதுக்கு எனக்கு அஞ்சு நிமிஷம் ஆகாது.. ஆனா இப்பவும் ஐயோ பாவம் மனுஷன் தனியா நின்னுடுவாருன்னு உங்கள நினைச்சு தான் எனக்கு வருத்தமா இருக்கு... மூஞ்ச அப்படி வைக்காதீங்க, அந்த மனுஷனுக்கு என்ன தேவை ஏது தேவைன்னு பார்த்து செய்யுங்க ... நான் எங்கேயும் போக மாட்டேன் உங்க கூட தான் இருந்து தொலைப்பேன் என்ற நான்சியை இறுக்கி கட்டிக் கொண்டவன்

"சாரிடி பணம் இருக்கிங்கிற திமிருல ஆடிட்டோம் இப்படி எங்களால ஒரு குடும்பம் கேள்விக்குறியாகி நிற்கும்னு நாங்க எதிர்பார்க்கவே இல்லை ... மனசு உண்மையா வலிக்குதடி "என்ற கணவனை தட்டிக் கொடுத்த நான்சி

"விடுங்க நடந்ததை சரி செய்ய முடியும்னா, இந்த உலகத்துல அழுகையும் கண்ணீரும் இருக்கவே இருக்காது ... நடக்கிற தப்பெல்லாம் சரி பண்ணிடலாமே... ஏதோ ஆனதாகி போச்சு உங்க பொண்ணு தான் உங்க மேல ரொம்ப கோவமா இருக்கா அவள சமாளிங்க .. என்றதும் கிருஷ் தன்மகள் அருகே போய் உட்கார அவள் ஒன்றும் சொல்லவில்லை ... அவள் கையைப் பிடித்து தன் கைக்குள் வைத்து கொண்டு 

சாரி பாப்பா"

"எதுக்கு?? 

"அது 

"விடுங்க , உங்களுக்கு என்னோட ஆசையே தெரியாது எப்படி அப்பா அவங்களோட உணர்வு புரியும்... பொண்ணுக்கு என்ன வேணும்னு கூட நீங்க யோசிச்சது கிடையாது ... அப்போ அவங்களுக்கு என்ன தேவைன்னு மட்டும் நீங்க எப்படி யோசிச்சு இருப்பீங்க... நீங்க எப்பவுமே இப்படித்தானேப்பா, எப்பவாவது இப்படி தப்பு பண்ணுனா வருத்தப்படலாம்... நீங்க எப்பவுமே தப்பு மட்டும் தான் பண்ணுவீங்க... சோ எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல" என்று சொன்ன மகளின் குற்றச்சாட்டில் மொத்தமாக உடைந்து போய் கிருஷ் நின்றான்

என் மனைவி, மகளை பார்த்துக் கொள்வாள் என்று கர்வமாக சொன்னவனுக்கு, இந்த குழந்தையை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு எனக்கும் பாதிக்கு பாதி உண்டு என்று மகளே நெற்றிப் பொட்டில் அறைந்தது போல் சொல்லிவிட்டு போய்விட்டாள்

இனி தன் தவறை கண்டிப்பாக திருத்திக் கொள்வான் மகள் பின்னால் ஓடிப்போய் அவள் முன்னால் முழங்கால் போட்டு வேண்டுதலாக கைகூப்பி நின்ற கிருஷ் 

சாரி பாப்பா என்ற தன் தகப்பனை அப்படி பார்த்ததும் குழந்தை அவன் கையைப் பிடித்துக் கொண்டு 

போய் கார் எடு டாடி ,சும்மா சீன் போடாத, அம்மா வேணும்னா இதையெல்லாம் நம்பும் ... நான் நம்ப மாட்டேன் .. நான் நம்பனும்னா என்ன இனிமே வாரம் வாரம் அவுட்டிங் ஷாப்பிங் கூட்டிட்டு போகணும் சரியா என்று மகள் கேட்க 

இனி அவன் மறுத்து பேசுவானா என்ன ? சரி என்று வேகமாக தலையாட்ட தன் கையை விரித்து தகப்பனை தூக்கிக் கொள்ள சொல்ல... பூவாக மகளை தூக்கிக் கொண்டு தன் மனைவியை அணைத்து அழைத்துக் கொண்டு சென்றான்...

அம்சா எல்லாரும் ஒவ்வொரு விதமா தண்டனை கொடுக்கிறாங்க நீ மட்டும் என்னடி இப்படி அமைதியாக உட்கார்ந்து காபியை குடிச்சுக்கிட்டு இருக்க, ஏதாவது சொல்லு...

ஆற அமர உட்கார்ந்து காபியை குடித்துக்கொண்டு இருந்த அம்சாவின் அருகே நகத்தை கடித்து துப்பிக்கொண்டு அருண் உட்கார்ந்து இருந்தான்..

"படித்தவர்கள் விவரம் தெரிந்தவர்களே லெஃப்ட் ரைட் வாங்கும் பொழுது , தன் மனைவி என்ன முடிவு எடுப்பாள் என்று அருணுக்கு கெதக் என இருந்தது...

"நான் என்னத்த சொல்ல போறேன், நீங்க படிச்சவர் அதோட பணம் உள்ளவர் ... இப்படித்தான் செய்வீங்க 

"அது தெரியாம செஞ்சிட்டேன் 

"தெரியாம எப்படி செய்வீங்க, எவன் நம்மள கேள்வி கேட்க போறான்னு தைரியம் , அப்படியே கேள்வி கேட்டாலும் கை நிறைய பணம் இருக்கின்னு கொழுப்பு ... அப்படியே யாராவது ஏதாவது செஞ்சுட்டாலும், நம்ம கையில அதிகாரம் நண்பர் கூட்டம் இருக்கு , என்ன வேணும்னாலும் பண்ணிடலாம்கிற மெதப்பு... மனுஷன மனுஷனா மதிக்க தோணல .. சாதாரண ஆக்சிடென்ட் தானேன்னு நினைப்பு இல்ல 

"ம்ஹூம் 

"அசால்ட்டா குடிச்சிட்டு வந்து மோதிட்டீங்க ஆனா அதுக்கு பின்னாடி ஒரு குடும்பத்தோட கண்ணீரும் அந்த குடும்பத்தோட ரத்தமும் இருக்குன்னு என்னைக்காவது யோசிச்சு இருக்கீங்களா மாமா ... பத்து வருஷம் எப்படி குற்ற உணர்வே இல்லாம உங்களால வாழ முடிஞ்சது... எச்சில் விழுங்கினான்...

நாம செஞ்சது குற்றம்னு தெரிஞ்சாதானே குற்ற உணர்வு வரும் ... நாமதான் அந்த குற்றத்தை பணத்தை கொடுத்து அப்படியே மூடி மறைச்சிட்டு வந்துட்டோமே, நமக்கு எதுக்கு குற்ற உணர்வு எல்லாம் வர போகுது இல்ல...

ம்ஹூம் , ஏற்கனவே ரொம்ப வலிக்குது அம்சா நீ வேற வலிக்க வைக்காத ...

உங்களை வலிக்க வைக்கிறதுக்காக நான் பேசல மாமா.. உங்களுக்கு வலிச்சா எனக்கும் வலிக்கும் நல்லவேளை கருப்பன் அண்ணாவுக்கு செஞ்சதுக்கு அவரே வந்து தண்டனை கொடுத்துட்டார்... ஒருவேளை அவர் எதுவுமே செய்யாம இருந்திருந்தா, அந்த கடவுள் நமக்கு தண்டனை கொடுத்திருப்பார்ல... இவர் கொடுத்த தண்டனையாவது இத்தோட முடிஞ்சது... கடவுள் தண்டனை கொடுத்து இருந்தா, என் புள்ளையோட நிலைமை யோசித்துப் பார்க்கவே முடியல... பணம் நம்முடைய படிப்பு , பதவி இது எல்லாம் நாலு பேரு உதவனுமே தவிர நாலு பேர் நிம்மதியை கெடுக்குறதுக்கு இருக்க கூடாது மாமா ... 

அதுவும் நீங்க ஒரு டாக்டர் மத்த ரெண்டு பேர விடுங்க, ஆனா நீங்க அந்த இடத்தில என்ன செஞ்சிருக்கணும் .. அந்த உயிரை காப்பாத்த ஏதாவது செஞ்சுருக்கணுமா இல்லையா ?

ம்ம் 

எப்படி மாமா உங்களால விட்டுட்டு போக மனசு வந்தது ... நீங்க படிச்ச படிப்புக்கே துரோகம் பண்ணி இருக்கீங்க .... உயிரை காப்பாற்ற வேண்டிய நீங்களே இரண்டு உயிர காப்பாத்தாம வந்து இருக்கீங்க.... இனி நீங்க ஆயிரம் உயிரை காப்பாற்றினாலும் அது உங்களுக்கு பெருமை இல்லை... நான் எதுக்கு உங்களை தண்டிக்கணும் நான் எதுக்கு உங்களை விட்டுட்டு போகணும் கடைசி வரைக்கும் நீங்க செஞ்ச இந்த தப்பு உங்களை உறுத்திட்டே இருக்கும்.. அதுதான் எனக்கு கஷ்டமா இருக்கு .. உங்களால கஷ்டத்துக்கு ஆளான அவரே உங்களை மன்னிச்சுட்டு போகும்போது நான் உங்களை திட்டறதுனால என்ன ஆகப்போகுது, இனி தப்பு நடக்காம பாத்துப்பீங்கன்னு உங்க மேல நம்பிக்கை இருக்கு அதான் இங்க நின்னுட்டு இருக்கேன், குடிச்ச காபிக்கு காசு கொடுத்துட்டு வாங்க நான் போய் காரில் உட்காருறேன்...

ம்ம் பாப்பா என்று மகளை தொட 

"தொடாத போப்பா , கருப்பன் ஆங்கிள் போல ஒரு டேடி எனக்கு கிடைச்சு இருக்கலாம் ... உன்ன எனக்கு பிடிக்கல வா மம்மி அவனை டைவர்ஸ் பண்ணு என்ற மகளை அருண் பரிதாபமாக பார்க்க 

"ப்ச் இருந்துட்டு போகட்டும் இனி வாயை திறந்தா நீ சொன்னதை பண்ணிடுவோம் என்று அம்சவேணி தன் மகளை அழைத்துக் கொண்டு காரில் போய் உட்கார்ந்தாள்.....

தண்டனை அனுபவித்து இருந்தால் கூட இவ்வளவு வலி அவர்களை தாக்கி இருக்காது... கருப்பன் கொடுத்த ஒற்றை மன்னிப்பு, ஒற்றை நிராகரிப்பு ஒற்றைப் பார்வை , அவர்களை உயிர் உள்ளவரை வருத்திக் கொண்டே தான் இருக்கும் .. பிள்ளைகள் மனைவியர் முன்னே காலம் முழுக்க குற்றவாளியாகத் தான் நிற்க வேண்டும் 

இதுதான் அவன் கொடுத்த மாபெரும் தண்டனை அதிலிருந்து மூவரும் எந்த பணத்தை கொடுத்தும் தப்பிக்க முடியாது எந்த பதவியை வைத்தும் தப்பிக்க முடியாது...

உயிரே இல்லாத பணம்தான் பல உயிருள்ள உயிர்களை வதைத்து கொண்டிருக்கிறது , அஃதை சிம்மாசனம் போட்டு வைக்காமல் உயிர்களுக்கு உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தால் மட்டுமே மனிதம் காக்கப்படும்..